களக்காடு அருகே கரடிகள் அட்டகாசம் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு
களக்காடு அருகே உள்ள பகுதிகளில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
களக்காடு,
களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் மங்கம்மாள் சாலையில் உள்ள பிரண்ட மலை அடிவாரத்தில் கரடிகள் வசித்து வந்தது. இந்த கரடிகள் அந்த பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது. பின்னர் அவை பிரண்ட மலைக்கு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடிவார பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது.
இந்த கரடிகள் இரவு நேரங்களில் கள்ளிகுளம், காடுவெட்டி, சிங்கிகுளம் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து அங்குள்ள மா, பனை, சப்போட்டா, வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகளை அச்சுறுத்தவும் செய்கிறது. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவின்பேரில் வனசரகர் புகழேந்தி மேற்பார்வையில் வனத்துறையினர் கரடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கரடிகள் சிக்கவில்லை. இந்நிலையில் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு சிங்கிகுளத்தில் கூண்டு அமைத்து உள்ளனர். மேலும் அந்த பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story