இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் பாம்பன் கடல் பகுதியில் மீன் பிடித்த விசைப்படகு மீனவர்கள்


இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் பாம்பன் கடல் பகுதியில் மீன் பிடித்த விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 23 July 2019 4:45 AM IST (Updated: 23 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு, கைது நடவடிக்கையால் பாம்பன் கடல் பகுதியிலேயே விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் வீசி வந்த பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 607 விசைப் படகுகளில் 3000-திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.

கச்சத் தீவு அருகே நேற்று மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஏராளமான விசைப் படகுகளை அங்கு 3 கப்பலில் ரோந்து சென்ற இலங்கை கடற் படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியத்ததாக கூறப்படுகிறது.இதனால் இலங்கை கடற்படையினர் படகையும், மீனவர்களையும் கைது செய்துவிடுவார்கள் என்று கருதி மீனவர்கள் நேற்று பாம்பன்-தங்கச்சிமடம் இடையிலான வடக்கு கடல் பகுதியிலேயே மீன் பிடித்து கொண்டிருந்தனர். மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புவார்கள்.

இதுபற்றி விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி எமரிட் கூறியதாவது:-

நாளுக்கு நாள் இலங்கை கடற்படை பிரச்சினை அதிகமாக உள்ளது.கச்சத்தீவு அருகிலேயே ஏராளமான கப்பல்களை நிறுத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்து வருகின்றனர்.இலங்கை கடற் படையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பெரும்பாலான படகுகள் ராமேசுவரம்-பாம்பன் இடையிலான கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று வருகின்றன.இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால் மட்டுமே மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story