கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் விழுப்புரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் விழுப்புரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 22 July 2019 10:15 PM GMT (Updated: 22 July 2019 7:29 PM GMT)

கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று விழுப்புரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆலம்பூண்டி- நடுப்பட்டு சாலையில் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலை சுற்றி 4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை கடந்த 2 ஆண்டுகளாக தூராம்பூண்டி கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு கிராம மக்களை கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்து மிரட்டி வருகிறார்.

மேலும் கோவிலை சுற்றியுள்ள அரசமரம், ஆலமரம், இலுப்பை போன்ற மரங்களை அவரது குடும்பத்தினர் வெட்டி எடுத்துக்கொள்கின்றனர். இதை தட்டிக்கேட்கும் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். இதுபற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் மற்றும் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தாங்கள் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ஆசைத்தம்பி, ஒன்றிய அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கோலியனூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முருகையன் உள்ளிட்டோர், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் முன்னோர் களால் தானமாக வழங்கப்பட்ட மயானம் சில சமூகவிரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால் 7 ஏக்கர் அளவிலான சுடுகாடு பகுதி தற்போது 20 சென்ட் பகுதியாக சுருங்கி விட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை புதைப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை புதைக்க செல்லும்போது ஆக்கிரமிப்புதாரர்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story