செல்போனில் விளையாடியதை தாயார் கண்டிப்பு: 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
குயிலாப்பாளையத்தில் செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானூர்,
வானூர் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களது மகன் சுதன் (15). புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பள்ளி விடுமுறை என்பதால் சுதன் வீட்டில் இருந்து செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த அவருடைய தாயார் பிரேமா அவனை கண்டித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதன்பிறகு பிரேமா அருகில் உள்ள உறவினரது வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் தாயார் கண்டித்ததால் மனமுடைந்து காணப்பட்ட சுதன் வீட்டின் சமையல் அறையில் தனது தாயாரின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் சுதனுக்கு சாப்பாடு கொடுக்க அவரது வீட்டிற்கு வந்தார்.
அப்போது சுதன் சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே சுதனின் தந்தையான வேல்முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப் மற்றும் போலீசார் விரைந்து வந்து சுதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story