விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம்


விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 22 July 2019 9:30 PM GMT (Updated: 22 July 2019 7:53 PM GMT)

விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாமை கூடுதல் பதிவாளர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து இயந்திரவியல் துறையில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நேர்காணல் திறன், இயந்திரம் தயாரித்தல், வடிவமைத்தல் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி சார்ந்த பயிற்சி முகாமுக்கான தொடக்க விழா நேற்று காலை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக தொழில்துறை கூட்டு மைய இயக்குனர் தியாகராஜன், கூடுதல் இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன் அனைவரையும் வரவேற்றார்.

கூடுதல் பதிவாளர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் கூடுதல் பதிவாளர் செல்லத்துரை கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்களின் திறனை ஊக்குவித்து வேலைவாய்ப்பினை பெறுவதற்கு பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு பயிற்சிகள் நடந்து வருகிறது. இதில் முழு கவனத்துடன் செயல்பட்டு பயிற்சியை நல்ல முறையில் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றார்.

இந்த பயிற்சியில் விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி முகாமானது வருகிற 1-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story