தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் சீரான குடிநீர் கிடைக்க திட்ட பணிகள் தீவிரம்


தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் சீரான குடிநீர் கிடைக்க திட்ட பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 July 2019 10:30 PM GMT (Updated: 22 July 2019 7:54 PM GMT)

தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் சீரான குடிநீர் கிடைக்க திட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஊராட்சி நிர்வாகங்களின் மூலம் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளே பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாற்றாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சில கிராமங்களுக்கு காவிரி நீரும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து ஆழ்துளை கிணற்றின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது .காவிரிநீர் பெற்று வந்த பகுதிகளுக்கும் குழாய் உடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் போதுமான அளவு குடிநீர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழக அரசு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டம் தீட்டியது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நபார்டு நிதி உதவி ரூ.67 கோடியே 69 லட்சத்தை பெற்று அதனுடன் அரசு நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.81 கோடியே 41 லட்சம் மதிப்பில் 274 கிராம குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டு குடிநீரை சீரான முறையில் வழங்கும் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக தற்போது மாயனூர் அருகே கட்டளை பகுதி காவிரி ஆற்றில் தனியாக கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் குழாய்கள் மூலம் வரும் நீரை சேமித்து அனைத்து கிராமங்களுக்கும் அனுப்பும் வகையில் மணவாடி ஊராட்சி கள்ளுமடை அருகே 14 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு காவிரிநீர் அனைத்து கிராமங்களுக்கும் சீரான முறையில் கிடைக்கும்போது குடிநீர் தட்டுப்பாடு நீங்கி இப்பகுதி மக்கள் நிம்மதியடைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

Next Story