மதுரை அருகே பயங்கரம்: கர்ப்பிணி படுகொலை; முன்னாள் காதலருக்கும் வெட்டு, கணவர் உள்பட 2 பேர் கைது


மதுரை அருகே பயங்கரம்: கர்ப்பிணி படுகொலை; முன்னாள் காதலருக்கும் வெட்டு, கணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2019 5:45 AM IST (Updated: 23 July 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் காதலருடன் குடித்தனம் நடத்திய கர்ப்பிணியை அவருடைய கணவர் உள்பட 2 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செக்கானூரணி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடிவேல்கரை கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). இவருடைய மனைவி அம்சத் (22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளன.

திருமணத்துக்கு பின்பு வடிவேலுடன், அம்சத்தின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்ததாகவும், 2 குழந்தைகளுக்கு தாயான பின்பு, அவருடைய போக்கில் மாறுதல் ஏற்பட தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு காரணம் அசம்த்தின் முன்னாள் காதலர் மதன் என கூறப்படுகிறது. அம்சத்தை அவ்வப்போது மதன் ரகசியமாக சந்தித்து தனது பழைய காதலை புதுப்பித்துள்ளார்.

இருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டதை அறிந்து வடிவேல் கண்டித்து வந்தார். அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அம்சத், மதனுடனான தொடர்பை கைவிடவில்லை.

இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையின் போது, அம்சத் தனக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. மேலும் தன்னுடைய 2 குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு அம்சத் முன்னாள் காதலருடன் சென்றுவிட்டார். பின்னர் 2 பேரும் செக்கானூரணி பசும்பொன் தெருவில் உள்ள வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர்.

தாயிடம் இருந்து பிரிந்த தன்னுடைய குழந்தைகள் தவித்தது வடிவேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் அம்சத்தை பழிவாங்க நினைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வடிவேல், தனது நண்பர் ராஜேசுடன் (34) செக்கானூரணிக்கு மதன் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரும், அம்சத்தும் தூங்கி கொண்டிருந்தனர்.

இதையடுத்து வடிவேல் தான் வைத்திருந்த அரிவாளால் தூங்கி கொண்டிருந்த அம்சத், மதன் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக தெரியவருகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அம்சத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் வடிவேலும், ராஜேசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வெட்டுக்காயத்துடன் போராடிய மதனின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறியபடி ஓடிவந்து பார்த்தனர். மதனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சொக்கானூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட அம்சத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேசை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட அம்சத் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story