7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்காக மத்திய அரசு நிதி தந்ததாக கூறுவது மக்களை திசை திருப்பும் செயல் - நாராயணசாமி கண்டனம்


7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்காக மத்திய அரசு நிதி தந்ததாக கூறுவது மக்களை திசை திருப்பும் செயல் - நாராயணசாமி கண்டனம்
x
தினத்தந்தி 23 July 2019 4:45 AM IST (Updated: 23 July 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக மத்திய அரசு நிதி தந்ததாக கூறுவது மக்களை திசை திருப்பும் செயல் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் 7-வது ஊதியக்குழுவினை அமல்படுத்தியதற்காக மத்திய அரசு நிதி தந்தது என்ற விவகாரம் தொடர்பாக தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

சிவா:- 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்கு புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.1,545 கோடி கொடுத்ததாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். அது உண்மையா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- இது வாழைப்பழ பிரச்சினை போன்றது. கேட்டால் அதுதான் இது என்பார்கள்.

அன்பழகன் (அ.தி.மு.க.):- இந்த பிரச்சினை நாடாளுமன்றம் சம்பந்தப்பட்டது. அதற்கு எம்.பி. விளக்கம் கேட்டுள்ளாரா?

அமைச்சர் நமச்சிவாயம்:- இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பி. பேசியுள்ளார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி:- 2019-20க்கு மத்திய அரசு ரூ.1,576 கோடி கொடை (மானியம்) கொடுத்துள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ.56 கோடி உயர்த்தி தந்துள்ளனர். இது 7 சதவீத உயர்வுதான். ஒவ்வொரு ஆண்டும் கடந்த காலங்களில் 10 சதவீத நிதி உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு 42 சதவீத நிதியை கொடையாக தருகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 26 சதவீதம்தான் கொடுக்கிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசுதான் அமல்படுத்த சொன்னது. இதன்காரணமாக ரூ.650 கோடியை நாம் பட்ஜெட்டில் வழங்குகிறோம்.

அன்பழகன்:- மத்திய அரசு உதவி இல்லாமல் ஏன் நடைமுறைப்படுத்தினீர்கள்? அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எத்தனையோ மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

நாராயணசாமி:- நாம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தி 3 வருடமாக சம்பளம் கொடுத்து வருகிறோம். 6-வது ஊதியக்குழுவினை அமல்படுத்தியதற்கே மத்திய அரசு நிதி தரவேண்டி உள்ளது. தற்போது எம்.பி. கேட்டபோது ரூ.1,546 கோடி தந்ததாக மத்திய மந்திரி கூறியுள்ளார். அது வழக்கமாக மத்திய அரசு அளிக்கும் கொடைதான். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக நிதி தரவில்லை. ஆனால் நிதி தந்ததாக கூறுவது மக்களை திசை திருப்பும் செயல்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story