கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன், தாய் தீக்குளிக்க முயற்சி


கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன், தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 July 2019 10:45 PM GMT (Updated: 22 July 2019 9:10 PM GMT)

பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன், தாய் தீக்குளிக்க முயன்றார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது பெண் ஒருவர், 2 சிறுவர்களுடன் வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த மண்எண்ணெயை அவருடன் வந்த சிறுவர்கள் மீது ஊற்றி அந்த பெண்ணும் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவர்கள் மீது ஊற்றினார்கள். தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் பச்சியம்மா. எனது கணவர் பெயர் மாதேஷ். கட்டிட தொழிலாளி. எங்களுக்கு மஞ்சுநாதா, செல்லக்குட்டி என்ற 2 மகன்கள் உள்ளனர். நான் ஓசூரில் சானசந்திரத்தில் வ.உ.சி. நகரில் வசித்து வருகிறேன். எனது வீட்டின் அருகில் உள்ள செந்தில்குமார், லட்சுமி, வள்ளி ஆகியோருடன் சேர்ந்து 2016-ம் ஆண்டு முதல் தீபாவளி குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறோம். இதில் 300 உறுப்பினர்கள் உள்ளனர்.

மாதம்தோறும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வசூல் ஆகும். இந்த நிலையில் செந்தில்குமார், லட்சுமி ஆகியோர் மூலமாக அண்ணா நகரைச் சேர்ந்த சிவா என்ற நபர் அறிமுகம் ஆனார். அவரிடம் பணம் கொடுத்தால் வட்டி வரும். நஷ்டம் ஏற்படாது என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

இதை நம்பி நான் எனது 21 பவுன் நகை, ஒன்னல்வாடி அருகே உள்ள காலிமனை வீட்டு பத்திரம் ஆகியவற்றை அடமானம் வைத்து ரூ.80 லட்சம் வரையில் கொடுத்தேன். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டனர். மேலும் சீட்டு போட்ட சிலர் என்னிடம் வந்து பணத்தை திரும்ப கொடு. இல்லாவிட்டால் பொருட்களை கொடு என்று கேட்கிறார்கள்.

இது சம்பந்தமாக நான் செந்தில்குமார், லட்சுமி, வள்ளி, சிவாவிடம் கேட்ட போது அவர்கள் எனக்கு பணம் தர வேண்டியது இல்லை என்று கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதனால் தான் நான் எனது மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள வந்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அவர்களை போலீசார் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் அவரது புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story