ஆட்டையாம்பட்டி அருகே மனைவி இறந்த சில மணி நேரத்தில் உயிரைவிட்ட கணவர்


ஆட்டையாம்பட்டி அருகே மனைவி இறந்த சில மணி நேரத்தில் உயிரைவிட்ட கணவர்
x
தினத்தந்தி 23 July 2019 4:00 AM IST (Updated: 23 July 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டையாம்பட்டி அருகே மனைவி இறந்த சில மணி நேரத்தில் துக்கம் தாங்காமல் கணவரும் உயிரிழந்தார்.

ஆட்டையாம்பட்டி, 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே கோணங்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 85). இவருடைய மனைவி பாப்பா (76). இவர்களுக்கு வேலுசாமி என்ற மகன் மற்றும் பழனியம்மாள், சம்பூர்ணம், விஜயா என்ற மகள்கள் உள்ளனர். இதனிடையே கோவிந்தசாமி என்ற மகன் மட்டும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனிடையே முத்துசாமி, பாப்பா தம்பதியினர் அதீத அன்புடன் வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களாக பாப்பாத்தி வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்தார். இதையடுத்து முத்துசாமி மனைவியை அருகில் இருந்து கவனித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் பாப்பாத்தி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைப்பார்த்து முத்துசாமி அதிர்ச்சியடைந்தார். மேலும் மனைவி இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் அவர் தவித்தார். பின்னர் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மதியம் 1 மணியளவில் முத்துசாமியும் உயிரிழந்தார்.

சாவிலும் இணை பிரியாத தம்பதிகுறித்த தகவல் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. வாழ்வில் 60 ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து, சாவிலும் இணைப்பிரியாமல் தம்பதியினர் உயிரைவிட்ட சம்பவம் அறிந்து கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த கிராமத்தினர் திரண்டு இறந்த தம்பதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை மைதானம் அருகே இறந்த தம்பதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story