துப்பாக்கியால் சுட்டு ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை : போலீஸ் விசாரணை
புனேயில் துப்பாக்கியால் சுட்டு ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புனே,
புனே விமான் நகர் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் சச்சின் சிவாஜி (வயது28). இவர் பிம்பிலே குரவ் பகுதியில் தனது தம்பி தீபக் சிவாஜி, நண்பர் விஷால் ஆகிய இரண்டு பேருடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு தீபக் சிவாஜி வெளியில் சென்றிருந்தார்.
விஷால் குளியல் அறையில் இருந்தார். அப்போது அறையில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதை கேட்டு பதறி போன விஷால் வெளியே வந்து பார்த்த போது, சச்சின் சிவாஜி நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரது கையில் துப்பாக்கி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷால் அலறினார். உடனடியாக சச்சின் சிவாஜி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சாங்வி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story