மாவட்ட செய்திகள்

கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல் + "||" + In Kambam Condemned for not providing ration store products Picketing

கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல்

கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல்
கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்,

கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் உள்ள காலனியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1,430 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கடையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மேலும் புழுங்கல் அரிசிக்கு பதிலாக பச்சரிசி மட்டுமே வழங்குவதாகவும், பாமாயில் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளரிடம் கார்டுதாரர்கள் கேட்டால், அதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை.


இவையில்லாமல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வாங்காமல் இருக்கும்போது, வாங்கியதாக செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். மேலும் பொருட்கள் வழங்காததை கண்டித்து, கம்பம்மெட்டு சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்ராஜா, பவுன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரேஷன் பொருட்களை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இனி சுழற்சி முறையில் மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.