தொலைத் தொடர்பு நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து: கட்டிடங்கள் தணிக்கையில் ஊழல் -அசோக் சவான் குற்றச்சாட்டு


தொலைத் தொடர்பு நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து: கட்டிடங்கள் தணிக்கையில் ஊழல் -அசோக் சவான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 July 2019 11:01 PM GMT (Updated: 22 July 2019 11:01 PM GMT)

மும்பையில் 9 மாடி தொலை தொடர்பு நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தின் எதிரொலியாக கட்டிடங்கள் தணிக்கையில் ஊழல் நடந்துள்ளதாக அசோக் சவான் குற்றம்சாட்டினார்.

மும்பை,

மத்திய அரசின் மகாநகர் டெலிகாம் நிகம் லிமிடெட்(எம்.டி.என்.எஸ்) நிறுவனம் மும்பை பாந்திரா, எஸ்.வி. சாலையில் உள்ள 9 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

நேற்று இந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் பலத்த போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் தீ தடுப்பு தணிக்கை கடந்த ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இது உண்மை என்றால் தீவிபத்தின்போது கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்பது ஏன் இவ்வளவு கடினமாக மாறியது என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். கட்டிடத்தின் சிறிய அளவிலான ஜன்னல்கள் மற்றும் அடைக்கப்பட்ட கட்டிட அமைப்பின் காரணமாகவே தீயணைப்பு படையினர் இத்தகைய சிரமங்களை சந்தித்தனர். இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்.

சமீபத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடு சம்பவங்கள், தீவிபத்து சம்பவங்கள், தீ தடுப்பு தணிக்கை அல்லது கட்டிட கட்டுமான தணிக்கையில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலுக்கு இது சான்றாகும். மும்பை மாநகராட்சி இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் மும்பை டோங்கிரி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story