எண்ணூரில் ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை


எண்ணூரில் ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2019 11:30 PM GMT (Updated: 22 July 2019 11:30 PM GMT)

எண்ணூரில், உணவு பொருள் முழுமையாக வழங்காத ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் வ.உ.சி. நகரில் உள்ள ரேஷன் கடையில் 850 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மண்எண்ணெய் மற்றும் அரிசி ஆகிய பொருட்கள் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

பொருட்களை வாங்க பலமணி நேரம் காத்திருந்தாலும் இறுதியில் பொருட்கள் தீர்ந்து விட்டது. அடுத்த மாதம் வாருங்கள் என்று சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர் கள், குடும்ப அட்டைதாரர் களை திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மண்எண்ணெய் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் மண்எண்ணெய் வழங்கிவிட்டு, பல குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மண்எண்ணெய் முழுமையாக வழங்காத ரேஷன் கடை ஊழியர்களை கண்டித்து, ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரேஷன் பொருட்களை முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story