கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 8 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
மண்டியா,
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்துள்ள கபினி அணையும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த இரு அணைகளில் உள்ள தண்ணீர் தான் 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 40.43 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் போதிய மழை இல்லாததாலும், அணையில் குறைந்தளவே நீர் இருப்பதாலும் தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என கர்நாடகம் கைவிரித்தது. அதே வேளையில் மழை வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறியது.
இதற்கு மத்தியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக இந்த மாதம் தொடக்கம் முதல் பெய்து வருகிறது. குறிப்பாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் பாகமண்டலா, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் இரு அணைகளுக்கும் நீர்வரத் தொடங்கியது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
இதனால் கடந்த 12-ந்தேதி முதல் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 5,911 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 2,911 கனஅடி நீர் கால்வாய்களிலும் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 641 ஆக உள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உள்ளது.
அதுபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,271.19 அடியாக இருந்தது.
இதுகுறித்து காவிரி நீர்வாரிய கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நீரின் அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரும் என மொத்தம் 8 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்காக காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால், அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story