சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை; சட்டசபை கட்சி தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும் - சபாநாயகர் அறிவிப்பு
சட்டசபை கட்சி தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும், கொறடா உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றும் சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதில் ராமலிங்கரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்.
இதையடுத்து முனிரத்னா, பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், எச்.விஸ்வநாத், கோபாலய்யா, ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், பிரதாப்கவுடா பட்டீல், சிவராம் ஹெப்பார், பி.சி.பட்டீல், நாராயணகவுடா உள்பட 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் சபாநாயகர் முன்பு நிலுவையில் உள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
கடைசியாக கடந்த 19-ந் தேதி, சபை திங்கட்கிழமைக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார், 22-ந் தேதி (நேற்று) விவாதம் முடிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் நேற்று காலை 12 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசியதாவது:-
இன்று (நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனால் உறுப்பினர்கள் விரைவாக பேசி முடிக்க வேண்டும். மேலும் சித்தராமையா கொறடா உத்தரவு குறித்து ஒரு பிரச்சினையை கிளப்பி பேசினார். அதற்கு நான் உத்தரவு பிறப்பிக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சட்டசபை கட்சி தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கவில்லை.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கும் கொறடா உத்தரவுக்கும் தொடர்பு இல்லை. அதனால் கொறடா உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை. வேறு வழியாக அந்த எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்பது தான் அதன் பொருள். அதனால் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா உள்பட சபை கட்சி தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும். அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையில் வழங்கப்பட்டுள்ள அந்த அதிகாரத்தை முடக்க முடியாது.
கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரான என்னிடம் புகார் அளித்தால், அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். கொறடா உத்தரவு பிறப்பிப்பதும், பிறப்பிக்காமல் இருப்பதும் சட்டசபை கட்சி தலைவர்களின் விருப்பம்.
இவ்வாறு சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story