வருவாய்த்துறை இடத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க எதிர்ப்பு; அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்


வருவாய்த்துறை இடத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க எதிர்ப்பு; அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 23 July 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை இடத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்கு பயன்படுத்திக்கொள்ள கோவிலை ஒட்டியுள்ள வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் பண்ணாரி கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. பொதுவாக வனத்துறைக்கு சம்பந்தமான 1 பங்கு நிலம் எடுத்தால் வருவாய்த்துறையில் 2 பங்கு நிலம் தர வேண்டும் என்பது சட்டம்.

அதன் அடிப்படையில் கடம்பூரை அடுத்துள்ள திங்களூர் வருவாய் கிராமம் (தாளவாடி வட்டம் ) கோட்ட மாளத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான திருமலை கரடு என்ற இடத்தில் 250 ஏக்கர் நிலம் உள்ளது.

திருமலை கரடில் உள்ள 250 ஏக்கரில் 50 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்ய தாளவாடி வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நேற்று காலை கோட்டமாளம் கிராமத்திற்கு சென்றனர்.

அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளின் வாகனங்களை ஊர் எல்லையிலேயே சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறும்போது, ‘கோட்டமாளம் கிராமத்தில் வெள்ளை தொட்டி, கோட்டை தொட்டி. செலுமி தொட்டி உள்ளிட்ட ஊர்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்களின் பிரதான தொழிலாக ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம். திருமலை கரடு பகுதியில் 500 ஆண்டு பழமையான பெருமாள் கோவில் உள்ளது.

வருடந்தோறும் கார்த்திகை. புரட்டாசி மாதங்களில் சென்று வழிபாடு செய்து வருகிறோம். ஏற்கனவே புலிகள் காப்பகமாக அறிவித்து வனத்துறையினர் ஆடு, மாடு, மேய்க்க தடை விதித்து எங்கள் வாழ்வாதாரத்தையே முடக்கி விட்டனர். தற்போது திருமலை கரட்டில் தான் ஆடு, மாடு, மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

எனவே திருமலை கரடை வனத்துறைக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். மீறி நீங்கள் நிலத்தை கையகப்படுத்தினால் நாங்கள் ஊரை காலிசெய்து விடுவோம் என்றார்கள். இதைக்கேட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம், உங்கள் பிரச்சினையை மனுவாக எழுதி கொடுங்கள். உயர் அதிகாரிகளிடம் அளித்து நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் உயர் அதிகாரிகள் என்ன உத்தரவிடுகிறார்களோ அதன்படி அடுத்த கட்ட பணி தொடரும் என்று கூறி மனுவை வாங்கிச்சென்றார்கள்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story