கொடைக்கானல் அருகே யானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
கொடைக்கானல் அருகே யானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பேத்துப்பாறை, கணேசபுரம், அஞ்சுவீடு, அஞ்சூரான்மந்தை உள்பட பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி கிராம மக்கள் சமூக ஆர்வலர் மகேந்திரன் என்பவர் தலைமையில் நேற்று காலை பேத்துப்பாறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் வில்சன், வனச்சரகர் ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானைகளை கிராமப்பகுதிகளில் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக வனத்துறையினர் 2 குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மின்வேலி அமைக்க வேண்டும். சக்திநகர் அம்மன்காலனி வெள்ளைப்பாறை, வயல்வெளி, பேத்துப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகளை உடனடியாக அமைக்க வேண்டும். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 24 மணி நேரமும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story