துபாய், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னைக்கு கடத்தி வந்த ரூ.96 லட்சம் தங்கம் பறிமுதல், 8 பேரிடம் விசாரணை


துபாய், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னைக்கு கடத்தி வந்த ரூ.96 லட்சம் தங்கம் பறிமுதல், 8 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 23 July 2019 10:15 PM GMT (Updated: 23 July 2019 7:21 PM GMT)

துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு ரூ.96 லட்சம் தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்திவந்ததாக பெண் உள்பட 7 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஷேக் தாவூத் (வயது 33), சையத் அபுதாகீர்(35), சாகுல் அமீது ஆகியோர் வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன.

பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தையும், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

அதைப்போல் துபாயில் இருந்த வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த மைதீன் (51) என்பவரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 245 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் அதே போல், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரை சேர்ந்த நூர் ஆயிஷா(38) என்ற பெண்ணிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 390 கிராம் எடைகொண்ட தங்க வளையல்களை கைப்பற்றினார்கள்.

மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய சென்னையை சேர்ந்த சையத் லியாகத் அலி (29) என்பவரின் உள்ளாடைக்குள் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 413 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதித்ததில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஷேக் மிதார் சாகிப் (42), தொண்டியை சேர்ந்த யாசர் அரபாத் (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதித்ததில் 2 பேரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 571 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

பெண் உள்பட 8 பேரிடம் இருந்து ரூ.96 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 619 கிராம் தங்கமும், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் பெண் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story