மாவட்ட செய்திகள்

தோள்பட்டை வலிக்கு மருந்து கடைக்காரரிடம் ஊசி போட்டவர் மயங்கி விழுந்து சாவு + "||" + To the drugstore for Shoulder pain putting the injection man Death

தோள்பட்டை வலிக்கு மருந்து கடைக்காரரிடம் ஊசி போட்டவர் மயங்கி விழுந்து சாவு

தோள்பட்டை வலிக்கு மருந்து கடைக்காரரிடம் ஊசி போட்டவர் மயங்கி விழுந்து சாவு
அம்பத்தூரில் தோள்பட்டை வலிக்கு மருந்துக்கடைக்காரரிடம் ஊசிபோட்டவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

பூந்தமல்லி,

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கலெக்டர் நகர், மாதனாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் (வயது 42). டெய்லர். இவரது மனைவி மீனாகுமாரி (36). இவர்களுக்கு ஜெயஸ்ரீ(19), சுபஸ்ரீ(16), என 2 மகள்கள் உள்ளனர். குமாருக்கு நேற்று முன்தினம் இரவு தோள்பட்டை வலி அதிகமாக இருந்ததால் சூரப்பட்டு, பிரகாசம் நகரில் மருந்து கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடை நடத்தி வரும் பாஸ்கர் (52), என்பவரிடம் வலி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அப்போது குமாருக்கு, பாஸ்கர் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறிது நேரத்தில் குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை பாஸ்கர் எழுப்பி பார்த்தும், எழுந்து கொள்ளாததால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும், அங்கு வந்த குமாரின் குடும்பத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த குமாரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு குமாரை பரிசோதித்த டாக்டர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, இன்ஸ்பெக்டர் பொற்கொடி இறந்துபோன குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, மருந்து கடை உரிமையாளர் பாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், குமாருக்கு தோள்பட்டை வலி அடிக்கடி வருவதால் டாக்டர்கள் எழுதி கொடுத்த சீட்டை எடுத்து வந்து மருந்து வாங்க வந்ததாகவும், அப்போது குமாருக்கு, பாஸ்கர் ஊசி போட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அப்போது பாஸ்கர் சீட்டில் எழுதியிருந்த மருந்தின் வீரியத்தை காட்டிலும் கூடுதல் வீரியத்துடன் கூடிய மருந்தை ஊசி மூலம் செலுத்தினாரா? அல்லது மருந்து கடை நடத்தி வரும் பாஸ்கர் அதற்கான மருத்துவ படிப்பு படித்துள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் குமார் ஊசி போடப்பட்டதால் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் அம்பத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.