காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் எடப்பாடி பழனிசாமி
காஞ்சீபுரத்தில் அத்திவரதரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்.
காஞ்சீபுரம்,
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1–ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 23–வது நாளான நேற்று அத்திவரதர், இளம்பச்சை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அத்திவரதரை தரிசனம் செய்தார். அமைச்சருடன் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை மாவட்ட நிர்வாகமும் அறிவித்தது.
இந்தநிலையில், தற்போது அத்திவரதர் வருகிற 31–ந்தேதி வரை சயன கோலத்திலும் அடுத்த மாதம் 1–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை நின்ற கோலத்திலும் காட்சியளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
முதலில் அறிவித்தப்படி முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், பிந்தைய 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளிக்க செய்ய வேண்டும்
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்திவரதருக்கு சேவை செய்ய சென்ற கோவில் பட்டரை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர்.
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.55 மணியளவில், காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். கோவில் வாசலில் இருந்து சிவப்பு கம்பளம் அத்திவரதர் சன்னதி வரை போடப்பட்டு இருந்தது. பச்சை வஸ்திரம், முந்திரி, திராட்சை, கற்கண்டு, பாதாம் பருப்பு போன்றவற்றை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் துளசி மாலை, மல்லிப்பூ மாலை போன்றவற்றையும் வைத்து கோவில் பட்டாட்சியாரிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். அவை அனைத்தும் அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் அவர் கோவிலில் பணிபுரியும் 33 பட்டாட்சியார்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்திரத்தை வழங்கினார். இலவச தரிசன பாதைகள், சுகாதார வசதிகள், குறித்து அதிகாரிகளிடம் முதல்–அமைச்சர் கேட்டறிந்தார். பக்தர்கள் எந்த வித சிரமமும் இன்றி அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கெட் வழங்குமாறும் அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
முன்னதாக காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் மக்களுக்கு வேண்டிய வசதிகள் குறித்து முதல்–அமைச்சர் ஆய்வு செய்தார். அவரது வருகையையொட்டி ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தது வேதனைகுறியது என்று 102 வயதான ஒருவர் தெரிவித்தார். மேலும் முதல்–அமைச்சர் வருகையையொட்டி, போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்தது.
நிருபர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் 100–க்கும் மேற்பட்டோர் கோவிலுக்குள் இருந்தனர். அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்திவரதரை தரிசித்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு உயர் அதிகாரிகளுடன் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.