ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: சினிமா இயக்குனர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன்


ராஜராஜ சோழன் குறித்து அவதூறு பேச்சு: சினிமா இயக்குனர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 24 July 2019 4:45 AM IST (Updated: 24 July 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சினிமா இயக்குனர் ரஞ்சித்துக்கு, போலீஸ் நிலையத்தில் 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கும்பகோணம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் கடைத்தெருவில் கடந்த மாதம்(ஜூன்) 5-ந் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில் ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ரஞ்சித் மீது ஜூன் 10-ந் தேதி திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து இயக்குனர் ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

நிபந்தனை ஜாமீன்

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கும்பகோணம் கோர்ட்டில் 15 நாட்களுக்குள் ஆஜராகி இரு நபர் ஜாமீன் கொடுத்து ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் இயக்குனர் ரஞ்சித் கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்பு நேற்று ஆஜரானார். அப்போது நீதிபதி, இன்று(புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story