ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் பேரணி திருவாரூரில் நடந்தது


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் பேரணி திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி திருவாரூரில், விவசாயிகளின் பேரணி நடந்தது.

திருவாரூர்,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று பேரணி நடந்தது.

பேரணி

திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் மாசிலாமணி, தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் தேசபந்து, விவசாயிகள் நல சங்க மாநில செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி விவசாய அணி நிர்வாகி மீனாட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி நிர்வாகி குணசேகரன், அ.ம.மு.க. விவசாய அணி நிர்வாகி கார்த்தி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் சென்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கலெக்டரிடம் மனு

பேரணி முடிவில் மாவட்ட கலெக்டர் ஆனந்திடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். பேரணியால் திருவாரூர்-தஞ்சை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story