அ.தி.மு.க.. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க.. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையில் இருந்து நேற்று அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல் படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் தமிழக பகுதியான நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை அறிவித்துள்ளது. இதில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. யாராவது ஆராய்ச்சி செய்ய முயற்சி செய்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் பேசும் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், முதல்-அமைச்சர் நாராயணசாமி குறித்தும், மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்த காலம் குறித்தும் பேசினார்.

அப்போது தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர். இதனால் சபையில் அமளி நிலவியது. உடனே சபாநாயகர் சிவக்கொழுந்து குறிக்கிட்டு, தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர், காங்கிரஸ் கட்சி குறித்து அன்பழகன் பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியேறினார். இவருடன் மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர். அவர்களுடன் சேர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story