சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் 2 லாரிகள் மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு


சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் 2 லாரிகள் மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூரமங்கலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூத்தனூரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 28), லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை லாரியில் செங்கல் லோடுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு சென்றார். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(35). இவர் தனது லாரியில் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த லாரி அதிகாலை 4 மணி அளவில் சேலம் திருவாக்கவுண்டனூர் புதிய மேம்பாலத்தில் முன்னால் சென்ற செங்கல் லோடு லாரியை முந்தியது. திடீரென டிரைவர் ஆறுமுகம் லாரியின் வேகத்தை குறைத்தார். இதனால் பின்னால் வந்த செங்கல் லோடு லாரி எதிர்பாராத விதமாக அந்த கிரானைட் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

போக்குவரத்து பாதிப்பு

அதேசமயம் கிரானைட் லாரியின் பக்கவாட்டு கதவுகள் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்தன. இதனால் கிரானைட் கற்கள் சாலையில் விழுந்து சிதறியது. மேலும் செங்கல் லாரியின் முன்பக்க கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. இதில் லாரி டிரைவர் குப்புசாமி காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் காயமடைந்த குப்புசாமியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் மேம்பாலத்திற்கு அடியில் உள்ள வழியாக போக்குவரத்தை திருப்பி விட்டனர். மேலும் மாற்று லாரிகள் வரவழைக்கப்பட்டு அதில் செங்கல் மற்றும் கிரானைட் கற்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்குள்ளான 2 லாரிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story