மேலும் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு: வகுப்பறையில் ஆசிரியை ரதிதேவியை கொன்றது ஏன்? கைதான கணவர் வாக்குமூலம்


மேலும் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு: வகுப்பறையில் ஆசிரியை ரதிதேவியை கொன்றது ஏன்? கைதான கணவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 July 2019 5:30 AM IST (Updated: 24 July 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் ஆசிரியை ரதிதேவியை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக அவருடைய கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமங்கலம்,

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் குருமுனீசுவரன்(வயது 36). இவர் சென்னையில் கட்டிட என்ஜினீயராக வேலை செய்தார். இவருடைய மனைவி ரதிதேவி(33). இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். ரதிதேவி சமீப காலமாக கணவரைவிட்டு பிரிந்து, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் அவர் கடந்த மாதம்தான் மதுரை திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ரதிதேவி, பிற்பகலில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய கணவர் குருமுனீசுவரன், தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக ரதிதேவியை குத்தினார். மாணவர்கள் கண்முன் மிகவும் கொடூரமான முறையில் ரதிதேவி வகுப்பறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் குருமுனீசுவரன் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

திருமங்கலம் டவுன் போலீசார், கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்து குருமுனீசுவரனை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், ரதிதேவிக்கும் திருமணம் நடைபெற்று 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. என்னுடன் அவர் சரியாக குடும்பம் நடத்தவில்லை. அடிக்கடி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு வரமாட்டார். பலமுறை உறவினர்களை வைத்து பேசியும், கூப்பிட்டு பார்த்தும் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் என் மனைவி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்தேன். தற்போது அவர் திருமங்கலத்தில் உள்ள பள்ளியில் வேலைக்கு சேர்ந்து இருப்பதை அறிந்தேன். எனவே அவரை பள்ளிக்கூடத்தில் வைத்தே கொன்றுவிட முடிவு செய்து, கத்தி, ஸ்குரூடிரைவர் ஆகியவற்றை மறைத்து வைத்து எடுத்துச் சென்றேன். வகுப்பறைக்குள் நான் சென்றதை பார்த்ததும் ரதிதேவி அங்கிருந்து நழுவிச் செல்ல முயற்சித்தார். ஆனால் அதற்குள் நான் ஹெல்மெட்டால் தாக்கி, அவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டேன்.

இவ்வாறு குருமுனீசுவரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே ரதிதேவியின் தந்தை சந்திரன் போலீசாரிடம் அளித்த புகார் மனுவில், “குருமுனீசுவரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து என் மகளிடம் தகராறு செய்தார். இதனால் அவருடன் வாழ பிடிக்காமல் எனது மகள் என் வீட்டிற்கு வருவார். குருமுனீசுவரன் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரதிதேவிக்கு எதிராக செயல்பட்டு அவரை கொடுமைப்படுத்தினர்” என்று கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் குருமுனீசுவரனின் தந்தை சுப்பிரமணி, தாய் பஞ்சவர்ணம், சகோதரிகள் திருச்செல்வி, தனலட்சுமி, மைத்துனர்கள் சிவராஜ், செல்லமணி ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story