மாநில தலைவரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்


மாநில தலைவரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

மாநில தலைவரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்யகோரி மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சேலம்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்தார். இந்தநிலையில் கடந்த மே மாதம் ஓய்வு பெறும் நாளில் அவர் திடீரென பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை கண்டித்தும், பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய கோரியும் மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் ராஜ் கணேஷ் தலைமையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் கூறும் போது, ‘மாநில தலைவரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய கோரி இன்று(நேற்று) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. மேலும் சுப்பிரமணியனின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்வதுடன் ஓய்வூதியப்பலனை உடனடியாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி இயக்குனர் உள்பட 7 பேருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்‘ என்றனர்.

Next Story