நெல்லை பழைய பேட்டையில் ரூ.14.67 கோடியில் சரக்கு லாரிகள் முனையம் 3 மாதத்தில் பணியை முடிக்க கலெக்டர் உத்தரவு


நெல்லை பழைய பேட்டையில் ரூ.14.67 கோடியில் சரக்கு லாரிகள் முனையம் 3 மாதத்தில் பணியை முடிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 July 2019 10:45 PM GMT (Updated: 23 July 2019 9:29 PM GMT)

நெல்லை பழைய பேட்டையில் ரூ.14.67 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சரக்கு லாரிகள் முனைய பணிகளை 3 மாதத்தில் முடிக்க கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.

நெல்லை,

நெல்லை பழைய பேட்டையில் ரூ.14.67 கோடி செலவில் சரக்கு லாரிகள் முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தை கலெக்டர் ஷில்பா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நெல்லை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நெல்லை பழைய பேட்டையில் பேட்டை இணைப்பு சாலை அருகில் ரூ.14 கோடியே 67 லட்சம் செலவில் சரக்கு லாரிகள் முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்குள் பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும். அதன்பிறகு மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், நயினார்குளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பழைய பேட்டை -பேட்டை இணைப்பு சாலையை விரிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மரக்கன்றுகள்

நெல்லை மாநகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு இதுவரை 1,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் 1½ லட்சம் குடியிருப்புகள் உள்ளன. அங்கு பொதுமக்களும் தங்களது வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகள் மூலம் 185 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, செயற்பொறியாளர்கள் நாராயணன், பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story