டாக்டர் பயல் தற்கொலை வழக்கு: 3 பெண் டாக்டர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


டாக்டர் பயல் தற்கொலை வழக்கு: 3 பெண் டாக்டர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 24 July 2019 3:50 AM IST (Updated: 24 July 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் கைதான 3 பெண் டாக்டர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு போலீசார் 1,203 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

மும்பை,

மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26) மருத்துவக்கல்லூரி விடுதி அறையில் கடந்த மே மாதம் 22-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டாக்டர் பயலை சாதி ரீதியாக துன்புறுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மூத்த டாக்டர்களான ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டாக்டர் பயல் தற்கொலை வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான மூன்று டாக்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் கோர்ட்டு அவர்களை ஜாமீனில் விடுவிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

அண்மையில், டாக்டர் பயலின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்டு இருந்த தற்கொலை கடிதத்தையும் போலீசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்டனர்.

இந்தநிலையில், டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் கைதான பெண் டாக்டர்கள் 3 பேருக்கு எதிராகவும் நேற்று குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் 1,203 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் 274 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

Next Story