சட்டசபைக்கு தாமதமாக வந்த கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள்; சபாநாயகர் கடும் அதிருப்தி


சட்டசபைக்கு தாமதமாக வந்த கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள்; சபாநாயகர் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 24 July 2019 4:57 AM IST (Updated: 24 July 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபைக்கு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தாமதமாக வந்தனர். கூட்டம் தொடங்கியதும் இருக்கைகள் காலியாக கிடந்ததால் சபாநாயகர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பெங்களூரு, 

கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 23-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்றும், காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் ஆளுங்கட்சியினர் பேசுவார்கள் என்றும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. சபாநாயகர் 10.01 மணி அளவில் அவைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது ஆளுங்கட்சி தரப்பில் ராமசாமி, மந்திரி பிரியங்க் கார்கே உள்பட 6 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் யாரும் வரவில்லை.

அதே வேளையில் பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் அமர்ந்திருந்தனர். ஆளுங்கட்சியினர் இருக்கைகளில் பெரும்பாலானவை காலியாக இருப்பதை பார்த்த சபாநாயகர், ஆளுங்கட்சியினரே அலட்சியமாக இருப்பது சரியல்ல என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அப்போது மந்திரி பிரியங்க் கார்கே பேசுகையில், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் காலை உணவு சாப்பிட தாமதமாகிவிட்டது. அனைவரும் ரெசார்ட்டில் இருந்து பஸ்களில் புறப்பட்டு வரவுள்ளனர். எனவே 15 நிமிடங்கள் சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு சட்டசபை பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அத்துடன் சபாநாயகரும் சபையை ஒத்திவைக்க மறுத்துவிட்டார்.

அந்த சமயத்தில், பா.ஜனதா எம்.எல்.ஏ. பசவராஜ் பொம்மை பேசுகையில், இது ஜீரோ அரசு. அதனால் சபையில் யாரும் இல்லை என்றார். ஈசுவரப்பா பேசுகையில், கூட்டத்திற்கு ஆளுங்கட்சியினர் வராமல் இருப்பது சந்தேகமாக உள்ளது. ஏதாவது திட்டம் வகுக்கிறார்களோ என்று தோன்றுகிறது என்றார்.

தொடர்ந்து ஜனதாதளம்(எஸ்) கட்சி உறுப்பினர் சிவலிங்கே கவுடா பேசுகையில், நேற்று (நேற்று முன்தினம்) சட்டசபை கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் அவர்கள் ரெசார்ட்டுக்கு போய் சேர தாமதமாகிவிட்டது. எப்போதும் சட்டசபை காலை 11 மணிக்கு தான் நடக்கும். அதனால் காலை 11 மணிக்கு இன்றும் (நேற்று) சட்டசபை கூடும் என்று நினைத்துவிட்டனர். அவர்கள் விரைவில் வந்துவிடுவார்கள் என்றார்.

இதையடுத்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் காலை 10.35 மணி அளவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தனர். அதைதொடர்ந்து காலை 11 மணி அளவில் ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களும் அவைக்கு வந்தனர்.

அப்போது சிவலிங்கேகவுடா பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார். அதைதொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.


Next Story