தனியார் ஓட்டலில் இருந்து சட்டசபைக்கு தாமதமாக வந்த குமாரசாமி மீது பா.ஜனதா தாக்கு
பெங்களூருவில், தனியார் ஓட்டலில் இருந்து சட்டசபைக்கு நேற்று தாமதமாக வந்த குமாரசாமியை, ‘முதல்-மந்திரியாக இருக்கும் கடைசி வினாடி வரை மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்‘ என்று கர்நாடக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சட்டசபையில் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நேற்று காலையில் விவாதம் தொடங்கியது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலையில் நடந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இதை கர்நாடக பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பேசவேண்டிய மகாசூரர் சட்டசபையில் மாயமாகி உள்ளார். கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான கூட்டம் தொடங்கி உள்ளது. ஆனாலும் முதல்-மந்திரி குமாரசாமி தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்து வருகிறார். இதன்மூலம் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. முதல்-மந்திரியாக தான் இருக்கும் கடைசி வினாடி வரை மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பது, திருடுவதை குமாரசாமி தொடர்ந்து செய்கிறார். இதற்கு குமாரசாமி மற்றும் அவருடைய கட்சி கன்னட மக்களிடம் விரைவில் பதில் அளிக்க வேண்டிய நிலை வரும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த சில நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து கிண்டல் செய்வது போன்றும், சபாநாயகருக்கு கோரிக்கை விடுப்பது போன்றும் இருந்தது.
அந்த பதிவில், ‘மதிப்பிற்குரிய சபாநாயகரே. நாங்கள் இன்னும் விவாதம் நடத்துகிறோம். தயவுசெய்து அவகாசம் கொடுங்கள். மாலைநேரம் ஆகிவிட்டது வீட்டுக்கு போகவேண்டும். இந்த வார்த்தைகளை விடுத்து இன்றைக்காவது சரியாக விவாதம் நடத்துங்கள். ஏனென்றால் மாநில மக்கள் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்‘ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story