அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? தீர்ப்பை ஒத்திவைத்தார், சபாநாயகர்
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல், ரோஷன் பெய்க், சிவராம் ஹெப்பார், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆனந்த்சிங் ஆகிய 12 பேரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகிய 3 பேரும் என மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 10 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீமந்த்பட்டீல், நாகேந்திரா ஆகியோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு வழங்கியது. அதன் அடிப்படையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 23-ந் தேதி (நேற்று) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், உங்கள் மீது ஏன் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பினார்.
அதற்கு அந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி 4 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறு கோரினர். அதே நேரத்தில் அந்த எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகர் முன்பு மூத்த வக்கீல் அசோக் ஹாரனஹள்ளி உள்பட வக்கீல்கள் ஆஜராகினர். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அந்த வக்கீல்கள் கேட்டுக் கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளதால், அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இருதரப்பினரின் வாதம் முடிவடைந்ததை அடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்ப்பை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்த விசாரணையின்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
Related Tags :
Next Story