பொள்ளாச்சி பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் அச்சம்


பொள்ளாச்சி பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 25 July 2019 3:30 AM IST (Updated: 24 July 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி என்றால் தென்னை நகரம் என்கிற பேச்சுதான் எப்போதும் உண்டு. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் அந்த பெருமையை தகர்த்து போட்டுவிட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ.போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளபோதும், இன்னும் பொள்ளாச்சி அந்த மோசமான பெயரில் இருந்து விடுபட்டதாக தெரியவில்லை. அந்த சம்பவத்தை தொடர்ந்து பொள்ளாச்சி, வால்பாறை போலீஸ் சரக பகுதியில் மீண்டும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி விட்டது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருந்த போதிலும் பொள்ளாச்சி பகுதி மக்கள் மத்தியில் இந்த பாலியல் சம்பவங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

தொடர்ந்து அந்த கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனையில் அந்த சிறுமி போலீசில் புகார் கொடுத்தார். தற்போது அந்த சிறுமியின் காதலன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று தான் வருகின்றது. போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பொள்ளாச்சி பகுதி மக்களிடையே ஏற்பட்டதால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லூரிகளில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டு நகர கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம், தாலுகா, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதை தவிர பொள்ளாச்சி, வால்பாறை சரக பகுதிகளுக்கு சேர்த்து பொள்ளாச்சியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி, வால்பாறை சரகத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதை தவிர பொள்ளாச்சி சரகத்தில் மட்டும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றது. இதற்கிடையில் பொள்ளாச்சி பகுதியில் போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதால் தற்போது அதிகளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மகளிர் போலீசார் மூலம் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஏதாவது மாறுதல் இருந்தால் அவர்களை அழைத்து பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து மேலும் கடுமையாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம். புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story