அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றுக்கு பதிவு செய்ய புதிய அலுவலக கட்டிடம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கு பதிவு செய்ய புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தமிழ்நாடு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, கண் பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, தோல் பிரிவு, நரம்பியல் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் உள்ளது. இது தவிர ரத்த வங்கி, ஆய்வகங்கள், ஸ்கேன் மையங்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது. இதில் மகப்பேறு பிரிவில் தினமும் 40 பிரசவங்கள் வரை நடக்கிறது. அதேபோல் பிணவறையில் 2-க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனை நடக்கிறது.
இந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கப்பட்டு வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும், பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கும் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ளது. மேலும் அடுக்கம்பாறையில் இருந்து பென்னாத்தூர் செல்வதற்கும் போதிய பஸ் வசதி இல்லை. பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட தூரம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே இருந்து வந்தது.
எனவே பொதுமக்களின் நலனுக்காக அரசு பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்கும் அலுவலகம் புதிதாக தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கப்படுகிறது. சான்றுகள் பதிவு செய்வதற்காக, மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் போதிய இடம் வசதி இல்லாததால், அதிகாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் வழங்கும் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கேட்டு, மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி தற்போது பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்குவதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனரின் பொது நிதியில் இருந்து இந்த அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும் பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கும் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story