குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 24 July 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் 26-வது வார்டில் முனிசிபல் காலனி உள்ளது. இங்கு துப்புரவு தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களுக்கு லாரிகள் மூலம் வாரத்துக்கு இருமுறை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேல் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

மேலும் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீரையே நாங்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அதுவும் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story