உப்பாறு அணை பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்


உப்பாறு அணை பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
x
தினத்தந்தி 25 July 2019 5:00 AM IST (Updated: 25 July 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே உப்பாறு அணையில் சூலூர் விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தரை இறக்கி விமானப்படை வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உப்பாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது தண்ணீர் இல்லாததால் மைதானமாக காட்சி அளிக்கிறது. அணையில் இருந்து குறைந்த தொலைவில் சூலூர் விமானப்படை தளம் உள்ளது. இதனால் அணைப்பகுதியில் போர் ஒத்திகை நடத்த விமானப்படை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த கடந்த 17–ந் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து பறந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்று உப்பாறு அணைப்பகுதியில் தரை இறங்கியது. பின்னர் அதில் இருந்து இறங்கிய வீரர்கள், தாங்கள் கொண்டு வந்த அதிநவீன வாக்கி டாக்கி உள்ள பல்வேறு கருவிகளை வைத்து சிக்னலை ஆய்வு செய்தனர். ஆய்வு முடித்த பின்னர் விமானப்படை வீரர்கள் அந்த ஹெலிகாப்டரில் ஏறி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது முறையாக உப்பாறு அணை பகுதியில் 3 ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்தன. அப்போது அதில் ஒரு ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியது. பின்னர் அந்த ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கி மற்றும் நவீன ஆயுதங்களுடன் இறங்கிய 10–க்கும் மேற்பட்ட வீரர்கள், போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியை உப்பாறு மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கால்நடை மேய்ப்பவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் தீவிர வாதிகள் பதுங்கி விட்டார்களோ? அல்லது வேறு ஏதும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ என்று அச்சம் அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகுதான் விமானப்படை வீரர்கள் போர் வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி குண்டடம் போலீஸ் தரப்பில் கூறும்போது ‘‘ சூலூர் விமானப்படை தளத்திற்கு இந்தப் பகுதி அருகில் உள்ளதாலும் பயிற்சிக்கு ஏற்ற வகையில் உள்ளதாலும் இப்பகுதியில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி அப்பகுதி பொதுக்கள் கூறும்போது, ஹெலிகாப்டர்களை தரையிறக்கும்போது அதன் சப்தத்தால் கால்நடைகள் பயந்து மிரண்டு கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடுகின்றன. எனவே இதுபோல் ஒத்திகை நடப்பதை முன்கூட்டி அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். உப்பாறு அணைப்பகுதியில் விமான படை வீரர்கள் திடீரென்று போர் ஒத்திகையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story