ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு விரைவாக தீர்ப்பளிக்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்


ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு விரைவாக தீர்ப்பளிக்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 July 2019 4:15 AM IST (Updated: 25 July 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு விரைவாக தீர்ப்பளிக்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை,

தமிழக மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்தலைவர் காளிதாஸ் மற்றும் ஓய்வூதியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றவுடன் அவர்களது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பாதி தொகை ஓய்வூதியத்தில் வழங்கப்படுகிறது. இதில், 1960-வது ஆண்டு முதல் 1988-வது ஆண்டு வரை ஓய்வு பெற்றவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் பாதியும், அகவிலைப்படியில் 13 சதவீதமும் வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து, ஓய்வுபெறும்போது அரசு ஊழியர் பெற்று வந்த அகவிலைப்படியில் பாதியை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஓய்வூதியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, 1988-வது ஆண்டு மே மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கும், 1.1.1996-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 1.6.1988 முதல் 31.12.1995 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முரணாக அகவிலைப்படியில் 13 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, அகவிலைப்படியில் பாதியை வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு பதிலாக அப்போதைய நிதிச்செயலாளரின் அறிவுறுத்தலின்படி, 363 என்ற அரசாணையை பிறப்பித்தது.

இந்த அரசாணையில் மேற்கண்ட காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியில் பாதி தொகையை வழங்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக்கோரி 80-க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் மனுதாரர்களில் பெரும்பாலானோர் சுமார் 78 வயதுக்கும் மேற்பட்டோர் ஆவர். எனவே, கோர்ட்டு இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story