தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 25 July 2019 4:15 AM IST (Updated: 25 July 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு அத்திமரத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அத்திமரத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பகலவன் (வயது 23). இவர், அதே கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதல்ஜோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது. இதனிடையே பகலவனின் குடும்பத்தினர் இந்த காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காதல் ஜோடி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. அப்போது காதல் ஜோடிக்கு ஆதரவாக ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு ராஜனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் காதல் திருமணம் செய்த தம்பதிக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story