ஏ.டி.எம். எந்திரங்களில் ‘கேமரா-ஸ்கிம்மர்’ கருவிகளை பொருத்தி ரூ.50 லட்சம் நூதன கொள்ளை; சென்னையில் என்ஜினீயர் உள்பட 3 பேர் அதிரடி கைது


ஏ.டி.எம். எந்திரங்களில் ‘கேமரா-ஸ்கிம்மர்’ கருவிகளை பொருத்தி ரூ.50 லட்சம் நூதன கொள்ளை; சென்னையில் என்ஜினீயர் உள்பட 3 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 25 July 2019 5:00 AM IST (Updated: 25 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் ‘கேமரா-ஸ்கிம்மர்’ கருவிகளை பொருத்தி நூதனமான முறையில் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த என்ஜினீயர் உள்பட 3 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியையும், கேமராவையும் பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்களை பதிவு செய்து அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து நூதனமான முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகிறார்கள். இருந்தாலும், இதுபோன்ற நூதன கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியையும், கேமராவையும் பொருத்தி ஒரு கும்பல் மிகப்பெரிய நூதன கொள்ளையில் ஈடுபட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் அயனாவரம் போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், இதுதொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில், துணை கமிஷனர் நாகஜோதி தலைமையில், உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் (வயது 34), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அல்லாபக்‌ஷ்(36), மாங்காட்டை சேர்ந்த அப்துல்காதிக்(44) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இர்பான் தான் இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டவர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், ஏற்கனவே இதுபோன்ற வழக்கில் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்த இவர், மீண்டும் ஏ.டி.எம். எந்திரங்கள் மூலம் நூதன கொள்ளை தொழிலை தொடங்கிவிட்டார்.

இவரோடு கைது செய்யப்பட்டுள்ள அல்லாபக்‌ஷ், அப்துல்காதிக் ஆகியோர் ஏ.டி.எம். எந்திரங்களில் கேமரா மற்றும் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து இர்பானிடம் கொடுப்பார்கள். இர்பான் ரகசிய குறியீட்டு எண்களை வைத்து ‘என்கோடர்’ என்ற கருவி மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்துவிடுவார்.

வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு எண்களும் இவர்களுக்கு தெரியவந்துள்ளதால், போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள். கடந்த 10 நாட்களாக இந்த மோசடிகளை அரங்கேற்றி ரூ.50 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.

ஒரே ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து மட்டும் ரூ.10½ லட்சம் பணத்தை எடுத்து இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்புள்ள ‘ஆடி’ சொகுசு கார், கேமரா, ஸ்கிம்மர் கருவி, என்கோடர் கருவி மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

முக்கிய குற்றவாளியான இர்பானுக்கு 2 மனைவிகளும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் சில குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் பணத்தை இழந்த 15 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுக்கும்போது ஸ்கிம்மர் மற்றும் கேமரா கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை சோதித்து பார்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

Next Story