பள்ளிப்பட்டு அருகே விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிப்பட்டு அருகே விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. அப்போது கடந்த ஆண்டு இந்த பள்ளியில் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் 50 பேர் பள்ளியின் முன் திரண்டனர்.
தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கேட்டனர். தற்போது பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பள்ளிப்பட்டு– சோளிங்கர் நெடுஞ்சாலையில் பள்ளியின் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் ஆகியோர் மாணவர்களை அமைதிப்படுத்தினார்கள். பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.