வேப்பனப்பள்ளி அருகே கடும் வறட்சி: தண்ணீர் தேடி காலிக்குடங்களுடன் அலையும் பெண்கள்
வேப்பனப்பள்ளி அருகே கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் தண்ணீர் தேடி காலிக்குடங்களுடன் பெண்கள் அலைகின்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உண்டியல்நத்தம் இருளர் காலனி உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த காலனியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இந்த காலனியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் அறை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இவைகள் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் கிராம பெண்கள் காலை முதல் மாலை வரை காலிக்குடங்களுடன் அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று தண்ணீர் தேடி அலைகின்றனர்.
இதுகுறித்து இருளர் காலனியை சேர்ந்த மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெண்கள் குடங்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி முறையாக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story