மாவட்டத்தில் 300 பள்ளிகளில் நீர்மேலாண்மை குழு அமைப்பு முதன்மை கல்வி அதிகாரி உஷா தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 300 பள்ளிகளில் நீர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு இருப்பதாக முதன்மை கல்வி அதிகாரி உஷா தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று தேசிய பசுமைபடை சார்பில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளில் நீர்மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நீர்மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல், துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல் போன்றவற்றுடன் நின்று விட கூடாது. மாறாக தங்கள் பள்ளிக்கு தேவையான நீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
மேலும் தாங்கள் பணிபுரியும் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அவற்றை மீட்க வேண்டும். பழுதான ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர பள்ளிகள் மற்றும் வீடுகள் மட்டும் இன்றி பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தேசிய பசுமைபடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story