வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வேலூர்,
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வேலூரில் தங்கி வாக்கு சேகரிக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு 30 அமைச்சர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.வீரமணி ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் ஜி.ஹெச். சாலையில் வாக்கு சேரித்தனர்.
தொடர்ந்து மாலை வேலூரில் உள்ள பென்ஸ்பார்க் ஓட்டலில் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வணிகர்களை சந்தித்து வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 6 அமைச்சர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது வணிகர்கள் கூறுகையில், “நேதாஜி மார்க்கெட்டை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும்போது ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் மண்டித்தெருவில் உள்ள கடைகளை மேல்மொணவூருக்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் அக்கோரிக்கைளை மனுவாக அமைச்சர்களிடம் வழங்கினர்.
அப்போது அமைச்சர்கள், தற்போது வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் எவ்வித வாக்குறுதியும் அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘வணிகர்கள், வியாபாரிகள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர். அவை அனைத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு எடுத்துச்சென்று தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்றார்.
பின்னர் இரவு 8.30 மணியளவில் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து வேலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. மற்றும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் தேர்தலில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினர்.
இதில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.பாலசந்தர், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story