ஆம்பூரில் 10 நாள் வீட்டு வாடகை ரூ.25 ஆயிரமாக உயர்வு சக்கை போடு போடும் பிரியாணி வியாபாரம்


ஆம்பூரில் 10 நாள் வீட்டு வாடகை ரூ.25 ஆயிரமாக உயர்வு சக்கை போடு போடும் பிரியாணி வியாபாரம்
x
தினத்தந்தி 25 July 2019 3:30 AM IST (Updated: 25 July 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியதை தொடர்ந்து ஆம்பூரில் 10 நாள் வீட்டு வாடகை ரூ.25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஆம்பூர், 

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

ஆம்பூர் தொகுதிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து தேர்தலுக்காக வந்துள்ளவர்களுக்கு தங்குவதற்கு தனியார் திருமண மண்டபம், விடுதி, ரெசிடென்சி ஆகியவை முன்பதிவு ஆகிவிட்டது. இதனால் தற்போது அரசியல் கட்சியினர் தங்குவதற்கு வீடுகளை தேட ஆரம்பித்துள்ளனர். இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் அரசியல் கட்சியினருக்கு 10 நாள் வாடகைக்கு விட குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

பிரசாரத்திற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் வீட்டின் உரிமையாளர் கேட்கும் பணத்தை கொடுக்க அரசியல் கட்சியினர் முடிவு செய்து விட்டனர். ஆனாலும் வீடுகள் போதுமானதாக இல்லை என்பதால் ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களின் தங்கும் விடுதியை அரசியல் கட்சியினர் படை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆம்பூர் என்றால் பிரியாணிக்கு பெயர் பெற்றது ஆகும். ஏற்கனவே ஆம்பூரில் பிரியாணி வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது வெளியூர் நபர்கள் ஆம்பூரில் வந்து குவிந்துள்ளதால் அனைத்து பிரியாணி ஓட்டல்களிலும் வியாபாரம் சக்கை போடு போட ஆரம்பித்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story