நீர்நிலைகளை காக்க வலியுறுத்தி ‘வாட்ஸ்அப்’பில் கலெக்டர் ஆடியோ பதிவு
நீர்நிலைகளை காக்க வலியுறுத்தி ‘வாட்ஸ் அப்’மூலம் விழிப்புணர்வு தகவல்களை கலெக்டர் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வரவேற்பை பெற்று வருகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாகும். கடும் வறட்சியும் நிலவுகிறது. மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாகவும் திகழ்கிறது. ஆனால் நீர்நிலைகள் தூர்ந்து போய் தண்ணீரின்றி காணப்படுகிறது. எதிர்காலத்திலும் நீர்நிலைகள் வறண்டுபோவதை தடுக்கவும் அதில் ஆண்டு முழுவதும் தண்ணீரை தேக்கும் வகையில் கண்மாய்கள், குளங்களை தூர்வாரும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நீர்நிலைகளை காக்க வலியுறுத்தியும் கலெக்டர் கந்தசாமி ‘வாட்ஸ்அப்’பில் ஒரு ஆடியோ பதிவை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோ பதிவில் கலெக்டர் கந்தசாமி கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகளை காக்க எடுத்த முயற்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 184 நீர்நிலைகள் தன்னார்வலர்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாம் தான் முன்னோடியாக அதிகப்படியாக மக்களின் பங்கேற்போடு பணியாற்றி உள்ளதாக நான் அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளேன்.
இப்பணிகள் தரமாக செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணிமுடிந்த பின்னர் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்குகிறதா? என்று பார்க்க வேண்டும். சில நீர்நிலைகளை தூர்வாரும் போது அருகில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை நான் காண்கிறேன். இதை தவிர்க்கலாம். மரமும் இயற்கை தான். நீர்நிலையில் மரம் நின்றால் வெட்டவேண்டாம். அதன் உயிரை நாம் பறிக்க வேண்டாம். பல தலைமுறைகளை அந்த மரங்கள் பார்த்துள்ளது. நம்தலைமுறையில் அந்த மரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம். இப்பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி.
எனது சொந்த ஊரில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் இல்லை. நானும் ஒரு ஆர்வலராக மாற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது நடக்குமா என்ற கேள்வி இருந்தது. தற்போது நடந்து முடிந்துள்ளது.
நீர்நிலைகளை புனரமைத்ததில் பெரிய சிறப்பு என்னவென்றால் நீங்கள் செய்த இந்த காரியத்தை இனி யாரும் அழிக்க மாட்டார்கள். யாராவது அழிக்க வந்தால் முதல் குரல் உங்களுடையதாக இருக்கும்என்று நம்புகிறேன். இதற்கு தான் நான் பாடுபட்டேன். அதற்கு வெற்றிக்கனி கிடைத்துள்ளது. தொடர்ந்து வெற்றிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியாக தன்னார்வலர்களை உருவாக்க வேண்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அந்த ஆடியோ பதிவு முடிகிறது.
Related Tags :
Next Story