அழகன்குளம் அருகே காவலாளி வெட்டிக்கொலை
அழகன்குளம் அருகே தென்னந்தோப்பில் தங்கியிருந்த காவலாளியை மர்ம ஆசாமிகள் வெட்டி கொலை செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே உள்ள ஆற்றாங்கரையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த முனீசுவரன்(வயது 47) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். முனீசுவரனுக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், ராஜலட்சுமி என்ற மகளும், கருப்புச்சாமி, முத்துக்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர். மகள் ராஜலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது. முனீசுவரன் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தென்னந்தோப்பில் உள்ள குடிசையில் வசித்து வந்தார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அழகன்குளம் அருகே சாமித்தோப்பு பகுதியில் குடியிருந்து வருகின்றனர். முனீசுவரன் வெளியிடங்களுக்கு சென்று கிணறு வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முனீசுவரன் தென்னந்தோப்பில் உள்ள குடிசையின் அருகில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் முனீசுவரனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். நேற்று காலை அவருடன் கிணறு வெட்டும் தொழிலாளியாக வேலை செய்யும் ஆற்றாங்கரையை சேர்ந்த ஹாஜாமைதீன் என்பவர் வேலைக்கு அழைப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது முனீசுவரன் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஹாஜாமைதீன் இதுகுறித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையிலான போலீசார் முனீசுவரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்தும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story