நாட்டரசன்கோட்டையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தீவிரம்
சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை,
தமிழகம் முழுவதும் உள்ள பேருராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துதல் மற்றும் நீர் நிலைகளை சீரமைத்து கரைகளை பலப்படுத்தல், மரக்கன்றுகள் நடுதல் ஆகியவைகளை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாதம் தோறும் இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்கவிழா பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி செயல் அலுவலர் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், பேரூராட்சி அலுவலக வளாகம், செங்கமலத்தான் ஊருணி, தீர்த்தாகுளம் ஊருணி, நாயன்மார் ஊருணி, அரசு கட்டிடங்கள், சாலைகள், தெருக்கள் மற்றும் அரசு காலியிடங்களில் வேம்பு, புளி, பூவரசு, புங்கை மற்றும் பலவகை மரக்கன்றுகளை நட்டனர்.
இதுதொடர்பாக செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்களில் இது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோல் நீர்நிலைகளை சீரமைத்து கரைகளை பலப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது.
தற்போது மூன்றாவது கட்டமாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
மரக்கன்றுகள் நடுவதற்கு மாதம் ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த மாத இலக்கான ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story