தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
சிவகங்கை,
மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் தமிழில் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டிகள் வருகிற 7-ந்தேதி காலை 9.30 மணிக்கு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், சான்றிதழும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதை பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு போட்டி நடைபெறும் இடத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும். இதில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே ஒரு பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு மாணவர் கண்டிப்பாக ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். போட்டிகளுக்கான தலைப்புகள், நடுவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் முன்னிலையில் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு அறிவிக்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story