விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வேண்டுகோள்


விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 July 2019 5:21 AM IST (Updated: 25 July 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சேதராப்பட்டு,

அகில இந்திய தொழிற்சங்க கவுன்சிலின் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) 8-வது புதுச்சேரி மாநில மாநாடு சேதராப்பட்டு தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஜே.வி.எம். மகாலில் நடந்தது. முன்னதாக மாநில துணைத்தலைவர் மோதிலால் தலைமையில் தொழிலாளி, விவசாய ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் புருஷோத்தமன் வரவேற்று பேசினர்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் தொழிலாளி வர்க்க தலைவர் சங்கர், கம்யூனிஸ்டு எம்.எல். மாநில செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தொடர்ந்து நடந்த பிரதிநிதிகள் மாநாட்டில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தமிழ் மாநில தலைவர் குமார், கிராமப்புற தொழிலாளர் சங்க தேசிய கவுன்சில் உறுப்பினர் பழனி, விழுப்புரம் மாவட்ட செலயாளர் வெங்கடேசன், கடலூர் மாவட்ட செயலாளர் தனவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், புதிய சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்கங்கள் மீதும் ஏவப்படும் தாக்குதல்களை முறியடிக்க போராட்டங்களை தீவிரப்படுத்துவது.

*தமிழகத்தையும், புதுச்சேரியையும் பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும்.

*சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

*விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனைக்கு கட்டாயம் வைக்கவேண்டும்.

*கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களிடம் 3 ஆண்டுகளுக்கு உண்டான சந்தா தொகையை முன்னரே செலுத்த வற்புறுத்தும் திட்டத்தை மாநில வாரியம் உடனடியாக கைவிட வேண்டும்.

*உழைக்கும் பெண்களுக்கு சமவேலைக்கு சமஊதியம், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.

*உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story