கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் எடியூரப்பாவுக்கு காத்திருக்கும் சவால்கள்
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால், எடியூரப்பாவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசின் முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் ஜனதா தளம்(எஸ்) சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி எடியூரப்பா 7 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று, சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா 2-வது முறையாக அரியணை ஏறினார்.
ஆனால் அந்த ஆட்சி காலக்கட்டத்தில் எடியூரப்பா சந்தித்த சோதனைகள், சவால்கள் ஏராளம். கர்நாடக அரசியல் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்தது. மந்திரி பதவி கேட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வெளிமாநிலங்களுக்கு செல்வதை அவ்வப்போது வாடிக்கையாக வைத்திருந்தனர். இதனால் எடியூரப்பா நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பல சவால்களை வெற்றிகரமாக கையாண்டு எடியூரப்பா பா.ஜனதா ஆட்சியை வழிநடத்தினார். அப்போது பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகள் சேர்ந்து 18 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்து, அரசுக்கு ஆதரவு இல்லை என்று கூறினர். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடியூரப்பாவுக்கு அப்போது கவர்னராக இருந்த பரத்வாஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து பெரும்பான்மை நடைபெற்ற நாளன்று காலையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சுயேச்சைகள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகராக இருந்த போப்பையா தகுதி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். எடியூரப்பா அரசு கவிழ்வது உறுதி என்று அனைவருமே கருதினர். ஆனால் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், யாருமே எதிர்பாராத நிலையில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் களேபரத்தில் ஈடுபட்டதால், சட்டசபை போர்க்களமாக காட்சியளித்தது.
எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் 3 ஆண்டுகள் நீடித்த பிறகு கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இதில் எடியூரப்பாவின் பெயர் லோக்ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றது. இதனால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கட்சி மேலிடத்தின் உத்தரவை அடுத்து எடியூரப்பா பதவி விலகினார்.
அவர் கை காட்டிய சதானந்தகவுடாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. எடியூரப்பாவுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் 11 மாதங்களில் நீக்கப்பட்டார். எடியூரப்பாவின் ஆலோசனைப்படி ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் முன்பே, பா.ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. எடியூரப்பா கட்சியும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு கர்நாடக ஜனதா கட்சியை பா.ஜனதாவில் எடியூரப்பா இணைத்தார். பிறகு அவர் கர்நாடக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மைக்கு அருகில் வந்து நின்றது. ஆனால் ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, பெரும்பான்மை பலத்தை பெற்றபோதும், பெரிய கட்சி என்ற முறையில் பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா 3-வது முறையாக முதல்-மந்திரியானார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா மூன்றே நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் 14 மாதங்கள் ஆட்சி செய்துவிட்டு, பெரும்பான்மை பலம் இல்லாததால் ராஜினாமா செய்துள்ளார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதனால் சட்டசபையின் முழு பலம் அதாவது 224 உறுப்பினர்கள் அப்படியே உள்ளனர். இதில் பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை இல்லை. இதனால் பா.ஜனதா ஆட்சி அமைவதில் சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் நேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு பா.ஜனதா மேலிடம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
உடனே 4-வது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துவிடலாம் என்று திட்டமிட்ட எடியூரப்பா ஏமாற்றம் அடைந்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கும்வரை ஆட்சி அமைப்பதை நிறுத்தி வைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு அவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன என்பதை அனைவரும் அறிவார்கள்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டிய நிலை ஏற்படும். மந்திரிசபையில் முதல்-மந்திரி உள்பட 34 பேருக்கு மட்டும் இடம் வழங்க முடியும். அதிருப்தியாளர்கள் 15 பேர் மட்டுமின்றி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
அவர்களுடன் சேர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆகும். மந்திரிசபையில் 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டால், மீதம் முதல்-மந்திரி தவிர்த்து 16 இடங்கள் உள்ளது. ஆனால் மந்திரி பதவிக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்திக்கு ஆளாகும் கட்சி எம்.எல்.ஏ.க்களை எடியூரப்பா எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
2008-2013-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை எடியூரப்பா மறந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா அரசு வலுவான நிலையில் இருக்கிறது.
அதனால் கட்சியில் அதிருப்தியாளர்களை எளிதாக கையாள முடியும் என்று எடியூரப்பா நம்புகிறார். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள குமாரசாமி, உங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். அதனால் எடியூரப்பா அவ்வளவு எளிதாக ஆட்சியை நடத்தி செல்ல முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதனால் எடியூரப்பா முதல்-மந்திரி பதவிக்கு வந்த பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Related Tags :
Next Story